TAPS நன்றி அறிவிப்பு மாநாடு - அனைத்து ஆசிரியர்/ அரசு ஊழியர் இயக்கங்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்! - Daily Dhuniya

Latest

Wednesday, January 28, 2026

TAPS நன்றி அறிவிப்பு மாநாடு - அனைத்து ஆசிரியர்/ அரசு ஊழியர் இயக்கங்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்!

TAPS Thanksgiving Conference - A heartfelt appeal to all teacher/government employee organizations!



*அனைத்து ஆசிரியர்/ அரசு ஊழியர் இயக்கங்களுக்கும் ஒரு அன்பு வேண்டுகோள்!*

எந்த ஆசிரியரும்/ அரசு ஊழியரும் *ஏற்காமல், கடுமையாக எதிர்க்கும்* இந்த தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட (TAPS) ஓய்வூதிய திட்டத்தை நீங்கள் வரவேற்று, நன்றி அறிவிப்பு மாநாடு, *யார் சார்பாக நடத்தப் போகிறீர்கள்?*

உறுப்பினர்களை நலன் காக்க இயக்கங்களா? அல்லது *தலைவர்களின் தனிப்பட்ட அல்லது அரசியல் சார்பு நலன் காக்க இயக்கங்கள் இருக்கிறதா?*

உறுப்பினர்களை ஊறுகாய் போல், கிள்ளு கீரையாக பயன்படுத்த எண்ணினால் அதன் விளைவுகள் *இயக்கத்தின் வீழ்ச்சிக்கு வித்திடும்.* உறுப்பினர் என்னும் தூண் மீதுதான் இயக்கம் எனும் பெருந்தளம் அமைந்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம்.

”நீ அரிசி கொண்டு வருவாயாம், நான் உமி கொண்டு வருவேனாம், ஊதிஊதி திம்போமாம்”, என்ற சொற்றொடர்க்கு ஏற்ப எங்களுடைய பணத்தைக் கொண்டு முதலீடு செய்து, எங்களுக்கு அதிலிருந்து வங்கி வட்டியை மட்டும் தந்துவிட்டு, அசலை அரசே அபகரிக்கும் நவீன ஆருத்ரா திட்டம் தான் டாப்ஸ் எனும் திட்டம்.

ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கடுமையாக எதிர்க்கும் இந்த திட்டத்தை போற்றி நீங்கள் மாநாடு எந்த அடிப்படையில் நடத்த உள்ளீர்கள்?

மாநாட்டுத் தேதியை உறுதிப்படுத்தும் முன் முதலில் நீங்கள் ஒருங்கிணைப்பாளர் கூட்டங்களையும், பிரச்சார இயக்கத்தையும் நடத்துங்கள், அங்கே எழும் எதிர்ப்புகளை உணர்ந்து, உரிய திருத்தங்களை இந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வந்து விட்டு பிறகு தேதி முடிவு செய்யுங்கள். அனைத்து ஊழியர்களும் மனமுவந்து இதற்காக நன்கொடை தருவதோடு ஆத்ம திருப்தியோடு மாநாட்டிலும் உறுதியாக பங்கேற்போம்.

ஏறக்குறைய 23 வருட போராட்டத்திற்கு பின் கிடைத்த ஒரு வெற்றியாக இதை எப்படி நாங்கள் கொண்டாட முடியும்? எப்படி மத்திய அரசு என்பீஎஸ் என்னும் ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக யுபிஎஸ் எனும் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், அதில் எந்த மத்திய அரசு ஊழியர்களும் ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில், அது என்பீஸை விட மோசமான திட்டமாக இருந்தது. அதுபோல்தான் இந்த டாப்ஸ் எனும் ஓய்வூதிய திட்டம் சிபிஎஸ் என்னும் ஓய்வூதிய திட்டத்தை விட மோசமானதாக இருக்கிறது. இதுதான் சரியான தருணம் அனைத்து இயக்கங்களும் இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். மேலும், எப்படி உயர்நிலை மற்றும் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் இந்த மாட்டிற்கு எதிர்ப்பை தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோ, அதுபோல் ஒவ்வொரு சங்கமும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

உறுப்பினர் நலனே இயக்கங்களின் உயிர் மூச்சு. அதை விடுத்து அவர்கள் நலனை உதாசீனப்படுத்தி நீங்கள் உங்கள் தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்ள, மாநாட்டை முன் நின்று நடத்தினீர்கள் என்றால், நாளை நீங்களும் லெட்டர் பேடு சங்கங்கள் போல உறுப்பினர்களால் ஆக்கப்படுவீர்கள் என்பதை உணருங்கள்.

இந்த சரியான தருணத்தை பயன்படுத்தி நடத்தும் மாநாட்டிற்கு முன்பு அரசிற்கு இத்தகைய எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி சரியான திருத்தங்களை அதாவது சிபிஎஸ் கணக்கை ஜிபிஎப் கணக்காகவோ அல்லது ஓய்வு பெறும் பொழுது ஊழியர்கள் செலுத்திய பணத்தை வட்டியோடு திருப்பித் தரும் திருத்தங்களை இந்த திட்டத்தில் நீங்கள் செயல்படுத்தினால் இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும்.

இதை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள். அதை நாம் பெற்று விடலாம் என்று எடுபடாத சமாளிப்பு வாதங்களை தயவு செய்து இனிமேல் பரப்பாதீர்கள். அதை எந்த ஊழியரும் ஏற்கத் தயாராக இல்லை என்பதை உணருங்கள்.

மேலும் தொடர்ந்து 33 நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கான தீர்வையும் இந்த மாநாட்டிற்கு முன்பே அனைத்து இயக்கங்களும் முயன்று முடிக்க வேண்டிய ஒன்றாக இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

எங்களது முன்னோடிகளே! உங்களை நம்பித்தான் நாங்கள் ஒவ்வொரு முறையை களத்தில் முன் நின்று போராடுகிறோம். எத்தனையோ முறை வட்டாரம், மாவட்டம் கடந்து மாநில தலைநகருக்கு வரும்போது எங்களை ஏனோ நீங்கள் தடுத்து விட்டீர்கள். இந்த முறையாவது நாங்கள் வராமலேயே, நீங்கள் சாதித்துக் காட்டினால் என்றும் நன்றியோடு இருப்போம்.

இது இயக்கங்களின் பரிணாம காலம். எனவே, இயக்கங்கள் உயிர்பெற்று இயங்குவதும், ஒழிந்து போவதும், உங்கள் கையில் தான் இருக்கிறது. சாமான்ய ஊழியன் அரசாங்கத்தை நோக்கி எழுப்பும் கேள்விக்கான உந்து சக்தி தான் இயக்கங்கள். அந்த இயக்கங்கள் தன்னிலை மறந்து, தன் நோக்கத்தை கடந்து, சுயநலம் சார்ந்து, சுய பெருமை சார்ந்து இயங்கத் தொடங்கிவிட்டாள், நாளை அந்த இயக்கங்கள் மட்டுமல்ல நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள் என்ற எதார்த்தத்தை உணர முடியாதவரா நீங்கள்?

காலம் தாழ்த்தாமல், உங்களை நம்பி உள்ள ஊழியர்களுக்கு, நல்லதைச் செய்யுங்கள். எங்கள் கரம் கொண்டு தலைமேல் தூக்கி உங்களை எங்கள் தோள் மீது சுமப்போம், என்றென்றும் நன்றியுடன்!

*- ஒரு ஊழியனின் ஆதங்கம்.*

No comments:

Post a Comment