Is this a conference that will bring support to the government, or one that will bring discontent? - AIFETO.. 29.01.2026 அரசுக்கு ஆதரவினை கொண்டு வந்து சேர்க்கும் மாநாடா?.. அதிருப்தியினை கொண்டு வந்து சேர்க்கும் மாநாடா? - AIFETO.. 29.01.2026
*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:-36/2001.*
*பெறுநர்:-*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை- 600009.*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கனிவான வணக்கம்!..*
*முற்றிலும் தனிப் பார்வைக்கான வேண்டுகோள்!...*
*ஜாக்டோ ஜியோ சார்பாக 27.1.2026 சென்னையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமும், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கூட்டமும் நடத்தியுள்ளார்கள்.*
*உரிமை மீட்பு மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். தமிழ்நாடு அரசின் உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% சதவீதம் பிடித்தம் மறு பரிசீலனை செய்வது உட்பட, முக்கிய கோரிக்கைகளை அறிவிக்க உள்ளதாக முடிவாற்றி அறிவித்துள்ளார்கள்.*
*கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர்களில்10 பேர் தான் கையொப்பம் இட்டு உள்ளார்கள். ஆனால் செய்தியாளர்கள் பேட்டியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டம் போன்றே தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) கொண்டு வந்ததற்காக நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.*
*CPS திட்டம் சிறந்ததா?.. தமிழ்நாடு உறுதி அளிப்பு ஓய்வூதியத் திட்டம் (TAPS) சிறந்ததா?.. என்றால்... பத்து சதவீதம் பங்களிப்பு இல்லை என்றால் எல்லோரும் கொண்டாடி மகிழும் கூட்டமாகவே நடத்தலாம்.*
*20 ஆண்டுகள் முதல் 39 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ளவர்கள் CPS திட்டமே சிறந்தது!.. என்று சொல்லும் அளவிற்கு அதிருப்தியில் உள்ளார்கள்.*
*2022 இல் செப்டம்பர் 10 அன்று சென்னையில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்ற போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் எதிர்பார்த்த கோரிக்கைகளை அறிவிக்கவில்லை என்பதால் கொள்கை முழக்கமிட்டுக்கொண்டு வெளியேறினார்கள்!.. அதுமட்டுமல்லாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய சுவரொட்டியையும் கிழித்து விட்டு சென்றார்கள்.*
*ஆட்சியின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு நெஞ்சமே பதறியது!. 2026 ஜனவரி மாதம் 3ஆம் தேதி உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை அறிவித்தவுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பும், போட்டோ ஜியோ அமைப்பும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேர்முகமாக கண்டு நன்றிப் பெருக்கினை இனிப்புகள் பரிமாறிக் கொண்டதன் மூலம் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்கள்.* *சட்டப்பேரவை கூட்டத்திலும், ஆளுநர் உரையிலும் இந்த மகிழ்ச்சி பெருக்கினை அறிவித்து மகிழ்ந்தார்கள்.*
*ஜனவரி 24ஆம் தேதி சட்டப்பேரவையில் சில கோரிக்கைகளையும் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். அறிவிப்பினை வரவேற்ற சங்கங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வரவேற்பினையும் பாராட்டினையும் தெரிவித்தார்கள்.*
*பத்து அம்ச கோரிக்கைகளில் எந்த கோரிக்கையும் பள்ளிக்கல்வித்துறையால் நிறைவேற்றப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு.. இன்னமும் களையப்படவில்லை...*
*போராட்டங்கள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது....*
*60 ஆண்டு காலமாக தொடக்கக் கல்வி ஆசிரியர்களுடைய ஒன்றிய முன்னுரிமையினை அரசாணை 243 மூலமாக ரத்து செய்துவிட்டு மாநில அளவிலான முன்னுரிமையாக மாற்றி வெளியிட்டு விட்டார்கள். பெண் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறும்போது பாதிப்பு வரும் என்பது தெரிந்தும் திருந்திய அரசாணை வெளியிடப்படவில்லை.*
*அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த திட்டம் கூடுதல் உயர் கல்வி பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியத்தினை நிறுத்தி வைத்துள்ளார்கள். 20.3.2020க்கு முன்னர் கூடுதல் கல்வி தகுதி பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என்று அரசாணை வெளியிட்ட பிறகு இன்னமும் ஊக்க ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.*
*தணிக்கைத் தடை என்ற பெயரில் தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது பதவி உயர்வே இல்லாத தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை தர ஊதியம் ₹5400 வழங்கப்பட்டது. அரசாணைக்கு தணிக்கைத்தடை செய்து 15 லட்சம் 20 லட்சம் பிடித்தம் செய்யப்பட வேண்டுமென தணிக்கை துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்கள். ஓய்வூதியம் இல்லாமல் இந்த தலைமையாசிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.*
*பதவி உயர்வில் சென்ற நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தர ஊதியம் ரூபாய் 4700-ல் ஊதிய நிர்ணயம் செய்து ஊதியப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பி.லிட் பி.எட், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தணிக்கைத்தடை, இதர பாடங்களில் உயர்கல்வி படித்து ஊக்க ஊதியம் பெற்றதற்கு தணிக்கைத் தடை செய்து ஆணை வழங்கியிருக்கிறார்கள்.
தகுதித்தேர்வு& நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 23 ஆயிரம் பேர் பணி வேண்டி போராடி வருகிறார்கள்.*
*எல்லா கோரிக்கைகளையும் மாநாடு நடைபெற உள்ள இந்த எட்டு நாட்களில் முதலமைச்சர் அவர்கள் மாநாட்டில் அறிவிக்க முடியுமா?..*
*இத்தனை பிரச்சனைகளுக்கும் உரியவர்கள் மாநாட்டுப் பந்தலில் இருப்பார்கள்.*
*வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் நடைபெற்ற கூச்சல் குழப்பங்களை விட அதிகமாக... இதயத்தால் தாங்கிக் கொள்ள முடியாத... முழக்கங்களை கூட எழுப்புவதற்கும் தயாராக இருப்பார்கள். இதனை இந்த மாநாடு நடத்துபவர்களால் கட்டுப்படுத்த முடியுமா?..*
*தேர்தல் சமயம்... தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் மாநாடு எதிர்ப்புகள் ஏற்பட்டால் அதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனைகள் செய்வதற்கு ஆதாரமாக பயன்படுத்துவார்கள்.*
*எட்டு ஆசிரியர் இயக்கங்கள் ஐந்தாம் தேதி புது டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்!.. நாடாளுமன்றத்தில் உடன் சட்டம் இயற்ற வேண்டும்!..NPS வேண்டாம்!.. UPS வேண்டாம்!.. பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டமே அமல்படுத்த வேண்டும்!.. தனியார்மயக் கொள்கையை கைவிட வேண்டும்!.. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்த உள்ளார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகம் உள்ள சங்கங்கள் 12ஆம் தேதி தான் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பி வருகிறார்கள். அவர்கள் அவ்வளவு கேட்டுக் கொண்டும், மாற்றம் இல்லாமல் எட்டாம் தேதி நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெறும் அறிவித்து இருக்கிறார்கள்.*
*ஆறரை லட்சத்திற்கும் அதிகமானோர் CPS திட்டத்தில் உள்ளவர்களில் குறைந்த ஊதியம் பெறுவோர் குறைந்த பணிக்காலம் உடைய 15% விழுக்காட்டினர் தான் தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட பென்ஷன் (TAPS) திட்டத்தை வரவேற்கிறார்கள்.*
*பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ளவர்கள் TAPS திட்டம் பிரமாதம் என்று பேசுகிறார்கள்!.. ஆப்ஷன் என்று வருகிறபோது ஒரே தேதியில் பெருந்தொகை கிடைக்கும் என்று கணக்கு போடுகிறவர்கள் CPS திட்டமே பரவாயில்லை என்று நினைக்கிறார்கள்.*
*மத்திய அரசிலுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) உறுப்பினர்களின் பங்களிப்பு 10% என்றால் அரசு பங்களிப்பாக 18.5% தருகிறார்கள். 25 ஆண்டுகள் பணிக்காலத்திற்கு முழு ஓய்வூதியம் 50% விழுக்காடு தருகிறார்கள். ஆனால் தமிழக அரசு 30 ஆண்டுகள் பணியாற்றினால் தான் 50% விழுக்காடு முழு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்ற அறிவித்துள்ளார்கள்.*
*ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பணி நிறைவு பெறுகிற போது 60% சதவீதத்தினை திருப்பித் தருகிறார்கள். மீதியுள்ள 40% சதவீதத்தை வைத்துக்கொண்டு ஓய்வூதியம் தருகிறார்கள். இறந்து விட்டால் அவர்கள் குடும்பத்தாருக்கு 40% திருப்பி தந்து விடுகிறார்கள்.*
*இந்த திட்டத்தில் சேருவதற்கு முன்னர் இறந்து போனவர்கள், பணி நிறைவு பெற்றவர்களுக்கு உரிய ஓய்வூதியத்தியனை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்கள்.* *ஐந்து ஆண்டு பணிக்காலத்திற்கு ஒரு மாதம் போனஸ் என்ற அடிப்படையில் 25 ஆண்டு கால பணிக்காலத்திற்கு ஐந்து மாத போனஸும் வழங்கப்படுகிறது. அகவிலைப்படி (DA) உட்பட அனைத்து சலுகைகளும் உண்டு. ஆனால் அவர்களும் அகில இந்திய அளவில் பங்கேற்பு இல்லாத பழைய பென்ஷன் திட்டம் தான் எங்களுக்கு வேண்டும் என்பதில் ஒருமித்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.*
*மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜோதிபாசு அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றைக்கு முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி அவர்கள் காலம் வரை பழைய பென்ஷன் திட்டமே தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.*
*1985 ஜாக்டீ போராட்டம், 1988 ஜாக்டீ ஜியோ போராட்டம், 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்தை முன் நின்று நடத்தி... மூன்று போராட்டங்களிலும் சிறைத் தண்டனை அனுபவித்து 8 மாதகாலம் நிரந்தரப்பணி நீக்கத்தில் இருந்தவர்கள் நாங்கள்!..*
*தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலில் உச்ச நீதிமன்றம் வரை சட்டப் போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாக்கப்பட்டார்கள்.*
*இந்தியாவில் கடைசி சம்பளமாக இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தந்து SOCIAL ECONOMIC STATUS ஐ உயர்த்தியவர்... தலைவர் கலைஞர் அவர்கள் என்பதை நெஞ்சம் இருக்கும் வரை மறக்கத்தான் முடியுமா?...*
*அது மட்டுமா?..*
*ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து பணப்பலன் பெற ஆணை வழங்கியவர். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்தவர், வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களை பணி நியமனம் செய்தவர், 54000 தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பணி நிரந்தரம் செய்தவர்... ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் தலைவர் கலைஞர் அவர்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே நாம் வெளியிடலாம்!..*
*அவருடைய மகன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்ற காலத்தில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம் என்று எத்தனை எத்தனையோ!.. சாதனைகளை தொகுத்து வழங்கி வருகிறீர்கள்!..*
*ஆனால் மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள் அனைத்து களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கையினை தீர்வு காண முன்வரவில்லையே!.. என்கிற வேதனை நாளுக்கு நாள் வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது..*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மீதும் கொண்டுள்ள அக்கறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலையை அவர்களது முகநூல் பதிவுகள், புலனப் பதிவுகள் வழியாக முதலமைச்சர் அவர்களின் நுண்ணறிவு பிரிவிற்கு அனுப்பியுள்ளோம்.*
*பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உணர்வாளர்கள் எந்தக் காரணங்களுக்காகவும் மாற மாட்டார்கள். அந்தந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது அந்தந்த கட்சியின் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் அந்தந்த கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள்!..*
*ஆதரவு மாநாடு நடத்தப்போய் எதிர்ப்பினை ஏற்படுத்தக்கூடிய மாநாடாக அமைந்து விடக்கூடாது!.. என்பதற்கு இதயத்தில் இருந்து வெடித்து கிளம்பும் உணர்வுகளை அப்படியே உங்கள்முன் தொகுத்து தந்துள்ளோம்!..*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எளிமை, இனிமை அனைவரையும் சந்தித்து பேசுகின்ற அணுகுமுறையினை எந்நாளும் பாராட்டி நெஞ்சத்தில் பதிவு செய்து வருகிறோம்!..*
*நல்லது நடக்கட்டும்!..*
*என்றும் அரசின் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கத்தின் மூத்தப் பொறுப்பாளர்...*
*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் -AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com ,தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52, நல்லதம்பிதெரு, திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com*
No comments:
Post a Comment